Tuesday 3 July, 2007

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம்

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் தமிழக-கேரள எல்லையில் கம்பம், செங்கோட்டை, கோவை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலம் செல்லும் பொருட்கள் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக் கானவர்கள் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் அதை ஏற்று செயல்பட பிடிவாதமாக மறுத்துவரும் கேரள அரசுக்கு எதிராக ஒருநாள் பொருளாதாரத் தடை மறியல் போராட்டம் நடத்தப்பெறும் என பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு அறிவித்தது. போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் 15 அரசியல் கட்சிகள் 32 விவசாயிகள் சங்கங்கள் தமிழ்த் தேசிய அமைப்புகள் கலந்துகொண்டன.

கோவை கந்தே கவுண்டன் சாவடியில் பொருளாதார தடை மறியல் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் தணிக்கையாளர் பாலசுப்பிரமணியம், தமிழர் தேசிய இயக்க மாவட்டத் தலைவர் ஆர். காந்தி, தமிழர் உரிமைக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கி.த. பச்சையப்பன், விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுசி. கலையரசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் பொழிலன், தமிழர் கழகத் தலைவர் இரா. பாவாணன், தமிழக மனித உரிமை கழகத் தலைவர் அரங்க. குணசேகரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த மணிபாரதி, தமிழக இளைஞர் இயக்கத்தின் செயலாளர் தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் லோகநாதன், பெரியார் திராவிடர் கழக ஆட்சிக்குழு உறுப்பினர் வே. ஆறுச்சாமி, மா.ரெ. இராசகுமார், பெரியார் திராவிடர் கழக மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் ந. பிரகாசு, வே. கோபால், சா. கதிரவன், கா.சு. நாகராசன், நா. பன்னீர், கராத்தே இராசேந்திரன், மணிகண்டன், தனசேகரன், பாவேந்தன், சிவசாமித் தமிழன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இப்போராட்டத்தின் விளைவாக கோவை-பாலக்காடு இடையே போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.

No comments: