Friday 6 July, 2007

‘பண்டு கிராமங்கள் - இரட்டை பெஞ்ச்’ கொடுமைகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்த கழகச் செயல்வீரர்களை சாதி வெறியர்கள் உயிரோடு கொளுத்த முயற்சி! - ‘அரசு கொறட



திண்டுக்கல் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கிராமங்கள் தோறும் இரட்டைக்குவளை ஒழிப்பு - பஞ்சமி நில மீட்பு - ரிலையன்ஸ், வால்மார்ட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுக் கொள்ளை எதிர்ப்புப் பயணம் 11.4.07 முதல் 22.4.07 வரை நடத்தத் திட்டமிடப்பட்டது.
அனைத்து ஊர்களிலும் இரட்டைக் குவளை முறையின் கொடுமையை விளக்கியும், பஞ்சமி நில மீட்பின் அவசியத்தை விளக்கியும், விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக மக்களிடம் விளக்கப்பட்டது. பாடல்கள் மூலமும் மக்களிடம் கருத்துகள் எடுத்துச் சொல்லப்பட்டன. அனைத்து கிராமங்களிலும் மக்கள் நல்ல ஆதரவு அளித்தனர். பிரச்சாரத்தைக் கேட்டு கழகத் தோழர்களுக்கு பொது மக்கள் நன்கொடை வழங்கினர். எந்த இடத்திலும் சிறு சலசலப்புக்கூட இல்லை.
கழகத் தோழர்கள் பயணம் சென்ற பாதையிலுள்ள ஊர்களில் இரட்டை குவளை முறை இருக்கிறதா என ஆய்வு செய்ய கழகத் தோழர்களின் ஆய்வுக்குழு கிராமம் கிராமமாகச் சென்றது. அப்போது இரட்டைக் குவளை முறை மட்டுமல்லாமல் இரட்டை பெஞ்ச் முறை என்னும் கொடுமையும் இருப்பதும் தெரிய வந்தது. அதாவது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயரமான பெஞ்ச் அல்லது திண்ணை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் தரை அல்லது உயரம் குறைவான பெஞ்ச் என்ற பிரிவினை முறை.
இந்த இரண்டு கொடுமையும் பழனி ஒன்றியத்தில் வயலர் அருகேயுள்ள மிடாப்பாடி, மயிலாபுரம், நல் லெண்ணக் கவுண்டன்புதூர், பாப்பாகுளம், அய்யம் பாளையம், சின்னாக்கவுண்டன்புதூர், பழனி அருகேயுள்ள வேலாயுதம்பாளையம்புதூர், காவலப்பட்டி ஆகிய ஊர்களில் நடைமுறையில் உள்ளன. அதே போல தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கோவில் அம்மாபட்டி, அத்திமரத்துவலசு, ராஜாம்பட்டி, பணம்பட்டி, அக்கரைப்பட்டி, சரவணப்பட்டி, ஆலாவலசு, பூலாம்பட்டி, வாகரை, மரிச்சிலம்பு, போதுப்பட்டி, கொழுமங்கொண்டான், சங்கஞ்செட்டிவலசு, கல்துரை, கோட்டத்துரை, பெரியமொட்டனூத்து, தாளையூத்து, நாச்சியப்பக் கவுண்டன்வலசு ஆகிய ஊர்களிலம் இக் கொடுமைகள் உள்ளன. அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களிடமும் இதுபற்றி பேசி ஆதாரங்களை கழகத் தோழர்கள் சேகரித்தனர். புகைப் படமும் எடுத்தனர்.
தொடர்ச்சியாக தொப்பம்பட்டி அருகிலுள்ள வாகரைக்கு 15.4.07 மாலை 5.30 மணிக்கு பிரச்சாரக் குழு சென்றது. இந்த வாகரை கிராமத்தில் தான் பஞ்சாயத்து தலை வராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் ஒருவர் தேர்ந் தெடுக்கப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்கசாதி வெறியர்கள், அந்தத் தோழரை பஞ்சாயத்து கட்டடத்துக்கு வெளியே தரையில் அமர வைத்து, அவரைக் கொலை செய்யவும் முயற்சித்தனர். கழகப் பாடகர் பிரச்சாரம் குறித்த அறிவிப்பைத் தொடங்கிய உடனேயே கழகத் தோழர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் சுமார் 50 பேர் குவிந்தனர். மைக்கை நிறுத்து என்றனர்; பிறகு “இரட்டைக் குவளை பத்தியெல்லாம் இங்கு பேசக் கூடாது. நாங்கள் தெப்பம்பட்டி யிலேயே உன் பேச்சைக் கேட்டோம்; வாகரைக்கு வந்து பாத்துக்கலாம் என்றுதான் இருந்தோம் எனக் கூறி தோழர் மருதமூர்த்தியை கீழே தள்ளினர். பெட்ரோலை கொண்டு வாங்கடா, இவிங்க மேல் ஊத்துங்கடா, வண்டி மேல ஊத்துங்கடா என கும்பல் கத்தியது. இங்க பார், இதெல்லாம் பண்டு கிராமம் (குரனே கிராமம் - சாதி வளர்ச்சிக்காக நிதி திரட்டி வைத்து, தாழ்த்தப்பட்டோரை அடக்கி வைத்திருக்கும் கிராமம்) சுத்தி இருக்கற 30 ஊர்களும் பண்டு கிராமந் தான். இதுல எங்கேயும் உங்கள நாங்க பார்க்கக் கூடாது. மீறிப் பேசினீங்கனா அங்கேயே கொளுத் தீருவோம்” என்று வெறிக் கூச்சலிட்டனர்.
பிரச்சாரக் குழுவின் மீது தாக்குதல் நடந்த வாகரை கிராமத்திற்கு மிக அருகிலுள்ள தொப்பம்பட்டி வரை காவலர்கள் வந்தனர். ஆனால், ஒட்டன்சத்திரம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்குள் நுழைந்ததும் காவலர்கள் யாரும் வரவில்லை. வரவில்லை என்பதைவிட கொடுமை என்னவென்றால், இதுபற்றி கள்ளிமந்தையம் காவல்நிலையத்தில் புகார் செய்ய கழகத் தோழர்கள் சென்றனர். கழக வழக்கறிஞர்கள் செல்லத்துரை, ஜெபராஜ் இருவரும் உடன் சென்றனர். உதவி ஆய்வாளர் சீனிவாசன், யாரைக் கேட்டு வாகரைக்கு உள்ளே வந்தீர்கள்? புகாரெல்லாம் வாங்க முடியாது. உடனே கிளம்பி ஓடுங்கள் என மிரட்டியுள்ளார். 15.4.07 மாலை 6.30 முதல் 7.30 வரை அவருடன் கழகத் தோழர்கள் வாதம் செய்தும் புகாரை வாங்கவில்லை. 7.30 மணிக்கு வாகரையிலிருந்து இரண்டு மினி லாரிகளில் சுமார் 100 பேர் கள்ளிமந்தையம் காவல் நிலையத்திற்கு வந்திறங்கினர். ஒரு சிலர் உதவி ஆய்வாளரிடம் பேசுவதற்காக காவல் நிலையத்திற்குள் சென்றனர். மற்றவர்கள், ஏண்டா ஒழுங்கா ஓடாம கம்ளெய்ண்ட் பண்ண வந்திட்டீங்களா எனக் கூறி காவல்நிலையம் எதிரிலேயே வாகனத்தை அடிக்கத் தொடங்கினர். சத்தம் கேட்ட உதவி ஆய்வாளர் சீனிவாசன் வெளியே வந்த வாகனத்தைக் காப்பாற்றி உடனே வெளியேறுங்கள் என்றார்.
காவல் நிலையத்திலேயே கழகத் தோழர்களின் வாகனத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை அழைத்துக் கொண்ட சாதி ஒழிப்புக்காக களப்பணியாற்றிவரும் கழகத் தோழர்களை விரட்டினார் உதவி ஆய்வாளர்.
உடனே ஒட்டன்சத்திரம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கழகத் தோழர்கள் சென்றனர். அங்கு வெகு நேரம் யாரும் இல்லை. 9 மணிக்கு ஆய்வாளர் இராஜா வந்தார். அப்புகாரை வாங்கிக் கொண்டார். முதல் தகவல் அறிக்கை தருமாறு கழகத் தோழர்கள் கேட்டதற்கு, அவரோ ‘கேள்விப்பட்டேன்’. வாகரைக்காரர்களை தொலைபேசியில் கண்டித்தேன். அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது. புகாரெல்லாம் வாங்க முடியாது. முதல் தகவல் அறிக்கையும் தரமுடியாது” என்றார். “நான் ஒன்றும் செய்ய முடியாது, அரசுகொறடா சக்கரபாணி வாகரைக் காரர்களைக் கண்டித்ததற்கே என்னைக் கடுமையாகத் திட்டினார். அவரை மீறி புகாரெல்லாம் வாங்க முடியாது” என்றார். புகாரையாவது வாங்குங்கள், வாங்க வில்லையென்றால் சாலை மறியல் செய்வோம் எனக் கூறி பல தோழர்கள் சாலையில் அமர்ந்தனர். அதன் பின் ஆய்வாளர் கழகத் தோழர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துப் பேசினார். புகார் மனுவை வாங்கிக் கொண்டார். ரசீது கேட்டதற்கு அதற்கும் முடியாது என்றார். நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பின் ரசீது கொடுத்தார்.
அதன் பிறகு உங்கள் பிரச்சாரத்தை இதற்குமேல் தொடரக்கூடாது. அப்படித் தொடர வேண்டுமானால் எஸ்.பி.யிடம் அனுமதிக் கடிதம் வாங்கி நடத்துங்கள் என்றார். எஸ்.பி. அலுவலகத்தில் அனுமதிக் கடிதம் அல்லது அனுமதிச் சான்ற கொடுக்கும் வழக்கமே இல்லை என்ற நிலையில் பிரச்சாரத்தைத் தொடர முடியவில்லை. மேலும் பண்டு கிராமப் பகுதியில் மிகப் பெரும் காவல்துறைப் பட்டாளத்துடன் போனால் ஒழிய அங்கு பிரச்சாரம் நடத்த முடியாது என்பதை கழகத் தோழர்கள் அறிந்தனர். உள்ளூர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அனை வருமே சாதி வெறியர்களுக்கு கட்டுப்பட்டு, சாதி வெறியர்களின் பாதுகாவலரான அரசு தலைமைக் கொறடாவும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான சக்கர பாணிக்கு கட்டுப்பட்டு ஆதரவாகத்தான் இருக்கின்றனர்.சட்டவிரோதமாக நடக்கும் இந்த தீண்டாமை வன்கொடுமைகளை காவல் துறை தடுப்பதில்லை. மாறாக சாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்ய அனுமதிகூடக் கொடுப்பதில்லை. இரட்டைக் குவளை ஒழிப்பு என ஒரு வார்த்தை பேசியதற்கே உயிரோடு கொளுத்தத் துடிக்கும் காட்டு மிராண்டிகள் வாழும் பகுதியிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஓடிவந்த தோழர்களிடம் புகாரைக்கூட வாங்க வில்லை காவல் துறையினர். முதல் தகவல் அறிக்கையும் தரவில்லை. எப்படி வாகரை செல்லலாம் என மிரட்டியும் பார்க்கின்றனர். இந்நிலையில் அங்கு நிரந்தரமாக வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை?
பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தலை நடத்திவிட்டோம். ஆனால், அவற்றைவிடக் கொடுமையான - கொடுமைகளை வெளியே பேச முடியாத நிலையில் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ் கிறார்கள். தேவகோட்டை பகுதியிலுள்ள நாடு அமைப்பு போன்றதே பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளின் உள்ள பண்டுகிராம அமைப்பு. இப்பகுதிகளில் தமிழக அரசின் காவல்துறை செயல்படாமல், தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமை வன்கொடுமைகளைக் கண்டும் காணாமல் உள்ளது.
இந்த பண்டு கிராமங்களில் அரசு இவ்வன்கொடுமைகளைக் கடுமையாக ஒடுக்கி தடை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெற்று வாழ வழி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஏப்ரல் 22 அன்று திண்டுக்கல்லில் போராட்டத்தை அறிவிக்க உள்ளார். அரசுக்கு உரிய கால அவகாசம் கொடுத்து அதன் பின் போராட்டம் நடத்தப்படும். அது கண்டன ஆர்ப்பாட்டம், தொடர் முழக்க ஆர்ப்பாட்டமாக இருக்காது. இரட்டைக்குவளைகளை - இரட்டை பெஞ்சுக்களை முற்றிலுமாக ஒழிக்கும் வண்ணம் கடுமையான போராட்டமாக இருக்கும்.

1 comment:

valeciaiacovone said...

titanium frames | Titanium Worlds
At used ford edge titanium the core of the T-Shirt we titanium mens wedding band create premium quality pieces which combine titanium quartz crystal to titanium rainbow quartz create one of titanium quartz crystal our premium Material: Stainless Steel