Wednesday, 8 August, 2007

பெரியாரியல் பயிலரங்கம்


5.8.2007ஞாயிறு காலை 9.00மணி முதல் மாலை 6.00மணி வரை திருப்பூர் துரைசாமி அவர்கள் தோட்டத்தில் பெரியாரியல் பயிலரங்கம்நடைபெற்றதுநிகழ்ச்சிக்கு மாவட்டத்தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார் நிகழ்ச்சியில் கழக தலைவர் கொளத்தூர்மணி, பொதுச்செயலாளர் கு.இராம கிருட்டிணன் ஆகியோர் கலந்து கொண்டு இயக்க வரலாறு,இயக்கச் செயல்பாடுகள் குறித்து விரிவாகவிளக்கினர் நிகழ்ச்சியில் புதிய தோழர்கள் கலந்து அதிக அளவில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கருத்துக்களை கேட்டனர்.கலந்து கொண்ட தோழர்களுக்கு மதிய உணவை தோழர்கள் அகிலன்,முகில்ராசு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தினர்.நிகழ்ச்சியில் அங்ககுமார், ராவணன்,பல்லடம் திருமூர்த்தி,விஜயன்,அவிநாசியப்பன்,ஜீவாநகர்குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Friday, 6 July, 2007

‘பண்டு கிராமங்கள் - இரட்டை பெஞ்ச்’ கொடுமைகளை அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்த கழகச் செயல்வீரர்களை சாதி வெறியர்கள் உயிரோடு கொளுத்த முயற்சி! - ‘அரசு கொறடதிண்டுக்கல் மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கிராமங்கள் தோறும் இரட்டைக்குவளை ஒழிப்பு - பஞ்சமி நில மீட்பு - ரிலையன்ஸ், வால்மார்ட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் கூட்டுக் கொள்ளை எதிர்ப்புப் பயணம் 11.4.07 முதல் 22.4.07 வரை நடத்தத் திட்டமிடப்பட்டது.
அனைத்து ஊர்களிலும் இரட்டைக் குவளை முறையின் கொடுமையை விளக்கியும், பஞ்சமி நில மீட்பின் அவசியத்தை விளக்கியும், விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய வேண்டியதன் அவசியம் பற்றியும் விரிவாக மக்களிடம் விளக்கப்பட்டது. பாடல்கள் மூலமும் மக்களிடம் கருத்துகள் எடுத்துச் சொல்லப்பட்டன. அனைத்து கிராமங்களிலும் மக்கள் நல்ல ஆதரவு அளித்தனர். பிரச்சாரத்தைக் கேட்டு கழகத் தோழர்களுக்கு பொது மக்கள் நன்கொடை வழங்கினர். எந்த இடத்திலும் சிறு சலசலப்புக்கூட இல்லை.
கழகத் தோழர்கள் பயணம் சென்ற பாதையிலுள்ள ஊர்களில் இரட்டை குவளை முறை இருக்கிறதா என ஆய்வு செய்ய கழகத் தோழர்களின் ஆய்வுக்குழு கிராமம் கிராமமாகச் சென்றது. அப்போது இரட்டைக் குவளை முறை மட்டுமல்லாமல் இரட்டை பெஞ்ச் முறை என்னும் கொடுமையும் இருப்பதும் தெரிய வந்தது. அதாவது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உயரமான பெஞ்ச் அல்லது திண்ணை, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெறும் தரை அல்லது உயரம் குறைவான பெஞ்ச் என்ற பிரிவினை முறை.
இந்த இரண்டு கொடுமையும் பழனி ஒன்றியத்தில் வயலர் அருகேயுள்ள மிடாப்பாடி, மயிலாபுரம், நல் லெண்ணக் கவுண்டன்புதூர், பாப்பாகுளம், அய்யம் பாளையம், சின்னாக்கவுண்டன்புதூர், பழனி அருகேயுள்ள வேலாயுதம்பாளையம்புதூர், காவலப்பட்டி ஆகிய ஊர்களில் நடைமுறையில் உள்ளன. அதே போல தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கோவில் அம்மாபட்டி, அத்திமரத்துவலசு, ராஜாம்பட்டி, பணம்பட்டி, அக்கரைப்பட்டி, சரவணப்பட்டி, ஆலாவலசு, பூலாம்பட்டி, வாகரை, மரிச்சிலம்பு, போதுப்பட்டி, கொழுமங்கொண்டான், சங்கஞ்செட்டிவலசு, கல்துரை, கோட்டத்துரை, பெரியமொட்டனூத்து, தாளையூத்து, நாச்சியப்பக் கவுண்டன்வலசு ஆகிய ஊர்களிலம் இக் கொடுமைகள் உள்ளன. அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்களிடமும் இதுபற்றி பேசி ஆதாரங்களை கழகத் தோழர்கள் சேகரித்தனர். புகைப் படமும் எடுத்தனர்.
தொடர்ச்சியாக தொப்பம்பட்டி அருகிலுள்ள வாகரைக்கு 15.4.07 மாலை 5.30 மணிக்கு பிரச்சாரக் குழு சென்றது. இந்த வாகரை கிராமத்தில் தான் பஞ்சாயத்து தலை வராக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தோழர் ஒருவர் தேர்ந் தெடுக்கப்பட்டதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்கசாதி வெறியர்கள், அந்தத் தோழரை பஞ்சாயத்து கட்டடத்துக்கு வெளியே தரையில் அமர வைத்து, அவரைக் கொலை செய்யவும் முயற்சித்தனர். கழகப் பாடகர் பிரச்சாரம் குறித்த அறிவிப்பைத் தொடங்கிய உடனேயே கழகத் தோழர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள் சுமார் 50 பேர் குவிந்தனர். மைக்கை நிறுத்து என்றனர்; பிறகு “இரட்டைக் குவளை பத்தியெல்லாம் இங்கு பேசக் கூடாது. நாங்கள் தெப்பம்பட்டி யிலேயே உன் பேச்சைக் கேட்டோம்; வாகரைக்கு வந்து பாத்துக்கலாம் என்றுதான் இருந்தோம் எனக் கூறி தோழர் மருதமூர்த்தியை கீழே தள்ளினர். பெட்ரோலை கொண்டு வாங்கடா, இவிங்க மேல் ஊத்துங்கடா, வண்டி மேல ஊத்துங்கடா என கும்பல் கத்தியது. இங்க பார், இதெல்லாம் பண்டு கிராமம் (குரனே கிராமம் - சாதி வளர்ச்சிக்காக நிதி திரட்டி வைத்து, தாழ்த்தப்பட்டோரை அடக்கி வைத்திருக்கும் கிராமம்) சுத்தி இருக்கற 30 ஊர்களும் பண்டு கிராமந் தான். இதுல எங்கேயும் உங்கள நாங்க பார்க்கக் கூடாது. மீறிப் பேசினீங்கனா அங்கேயே கொளுத் தீருவோம்” என்று வெறிக் கூச்சலிட்டனர்.
பிரச்சாரக் குழுவின் மீது தாக்குதல் நடந்த வாகரை கிராமத்திற்கு மிக அருகிலுள்ள தொப்பம்பட்டி வரை காவலர்கள் வந்தனர். ஆனால், ஒட்டன்சத்திரம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்குள் நுழைந்ததும் காவலர்கள் யாரும் வரவில்லை. வரவில்லை என்பதைவிட கொடுமை என்னவென்றால், இதுபற்றி கள்ளிமந்தையம் காவல்நிலையத்தில் புகார் செய்ய கழகத் தோழர்கள் சென்றனர். கழக வழக்கறிஞர்கள் செல்லத்துரை, ஜெபராஜ் இருவரும் உடன் சென்றனர். உதவி ஆய்வாளர் சீனிவாசன், யாரைக் கேட்டு வாகரைக்கு உள்ளே வந்தீர்கள்? புகாரெல்லாம் வாங்க முடியாது. உடனே கிளம்பி ஓடுங்கள் என மிரட்டியுள்ளார். 15.4.07 மாலை 6.30 முதல் 7.30 வரை அவருடன் கழகத் தோழர்கள் வாதம் செய்தும் புகாரை வாங்கவில்லை. 7.30 மணிக்கு வாகரையிலிருந்து இரண்டு மினி லாரிகளில் சுமார் 100 பேர் கள்ளிமந்தையம் காவல் நிலையத்திற்கு வந்திறங்கினர். ஒரு சிலர் உதவி ஆய்வாளரிடம் பேசுவதற்காக காவல் நிலையத்திற்குள் சென்றனர். மற்றவர்கள், ஏண்டா ஒழுங்கா ஓடாம கம்ளெய்ண்ட் பண்ண வந்திட்டீங்களா எனக் கூறி காவல்நிலையம் எதிரிலேயே வாகனத்தை அடிக்கத் தொடங்கினர். சத்தம் கேட்ட உதவி ஆய்வாளர் சீனிவாசன் வெளியே வந்த வாகனத்தைக் காப்பாற்றி உடனே வெளியேறுங்கள் என்றார்.
காவல் நிலையத்திலேயே கழகத் தோழர்களின் வாகனத்தை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களை அழைத்துக் கொண்ட சாதி ஒழிப்புக்காக களப்பணியாற்றிவரும் கழகத் தோழர்களை விரட்டினார் உதவி ஆய்வாளர்.
உடனே ஒட்டன்சத்திரம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு கழகத் தோழர்கள் சென்றனர். அங்கு வெகு நேரம் யாரும் இல்லை. 9 மணிக்கு ஆய்வாளர் இராஜா வந்தார். அப்புகாரை வாங்கிக் கொண்டார். முதல் தகவல் அறிக்கை தருமாறு கழகத் தோழர்கள் கேட்டதற்கு, அவரோ ‘கேள்விப்பட்டேன்’. வாகரைக்காரர்களை தொலைபேசியில் கண்டித்தேன். அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது. புகாரெல்லாம் வாங்க முடியாது. முதல் தகவல் அறிக்கையும் தரமுடியாது” என்றார். “நான் ஒன்றும் செய்ய முடியாது, அரசுகொறடா சக்கரபாணி வாகரைக் காரர்களைக் கண்டித்ததற்கே என்னைக் கடுமையாகத் திட்டினார். அவரை மீறி புகாரெல்லாம் வாங்க முடியாது” என்றார். புகாரையாவது வாங்குங்கள், வாங்க வில்லையென்றால் சாலை மறியல் செய்வோம் எனக் கூறி பல தோழர்கள் சாலையில் அமர்ந்தனர். அதன் பின் ஆய்வாளர் கழகத் தோழர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துப் பேசினார். புகார் மனுவை வாங்கிக் கொண்டார். ரசீது கேட்டதற்கு அதற்கும் முடியாது என்றார். நீண்ட நேர வாக்குவாதத்திற்குப் பின் ரசீது கொடுத்தார்.
அதன் பிறகு உங்கள் பிரச்சாரத்தை இதற்குமேல் தொடரக்கூடாது. அப்படித் தொடர வேண்டுமானால் எஸ்.பி.யிடம் அனுமதிக் கடிதம் வாங்கி நடத்துங்கள் என்றார். எஸ்.பி. அலுவலகத்தில் அனுமதிக் கடிதம் அல்லது அனுமதிச் சான்ற கொடுக்கும் வழக்கமே இல்லை என்ற நிலையில் பிரச்சாரத்தைத் தொடர முடியவில்லை. மேலும் பண்டு கிராமப் பகுதியில் மிகப் பெரும் காவல்துறைப் பட்டாளத்துடன் போனால் ஒழிய அங்கு பிரச்சாரம் நடத்த முடியாது என்பதை கழகத் தோழர்கள் அறிந்தனர். உள்ளூர் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் அனை வருமே சாதி வெறியர்களுக்கு கட்டுப்பட்டு, சாதி வெறியர்களின் பாதுகாவலரான அரசு தலைமைக் கொறடாவும், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான சக்கர பாணிக்கு கட்டுப்பட்டு ஆதரவாகத்தான் இருக்கின்றனர்.சட்டவிரோதமாக நடக்கும் இந்த தீண்டாமை வன்கொடுமைகளை காவல் துறை தடுப்பதில்லை. மாறாக சாதி ஒழிப்புப் பிரச்சாரம் செய்ய அனுமதிகூடக் கொடுப்பதில்லை. இரட்டைக் குவளை ஒழிப்பு என ஒரு வார்த்தை பேசியதற்கே உயிரோடு கொளுத்தத் துடிக்கும் காட்டு மிராண்டிகள் வாழும் பகுதியிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஓடிவந்த தோழர்களிடம் புகாரைக்கூட வாங்க வில்லை காவல் துறையினர். முதல் தகவல் அறிக்கையும் தரவில்லை. எப்படி வாகரை செல்லலாம் என மிரட்டியும் பார்க்கின்றனர். இந்நிலையில் அங்கு நிரந்தரமாக வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை?
பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் தேர்தலை நடத்திவிட்டோம். ஆனால், அவற்றைவிடக் கொடுமையான - கொடுமைகளை வெளியே பேச முடியாத நிலையில் அங்குள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ் கிறார்கள். தேவகோட்டை பகுதியிலுள்ள நாடு அமைப்பு போன்றதே பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளின் உள்ள பண்டுகிராம அமைப்பு. இப்பகுதிகளில் தமிழக அரசின் காவல்துறை செயல்படாமல், தாழ்த்தப்பட்டோர் மீதான தீண்டாமை வன்கொடுமைகளைக் கண்டும் காணாமல் உள்ளது.
இந்த பண்டு கிராமங்களில் அரசு இவ்வன்கொடுமைகளைக் கடுமையாக ஒடுக்கி தடை செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்கள் விடுதலை பெற்று வாழ வழி செய்ய வேண்டும்.
இது தொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஏப்ரல் 22 அன்று திண்டுக்கல்லில் போராட்டத்தை அறிவிக்க உள்ளார். அரசுக்கு உரிய கால அவகாசம் கொடுத்து அதன் பின் போராட்டம் நடத்தப்படும். அது கண்டன ஆர்ப்பாட்டம், தொடர் முழக்க ஆர்ப்பாட்டமாக இருக்காது. இரட்டைக்குவளைகளை - இரட்டை பெஞ்சுக்களை முற்றிலுமாக ஒழிக்கும் வண்ணம் கடுமையான போராட்டமாக இருக்கும்.

மேட்டூரில் நாத்திகர் விழாவில் - கோவை. இராமகிருட்டிணன்

உயர்கல்வி இடஒதுக்கீட்டில் ‘தகுதி-திறமை’ வேண்டும் என்று கூறும் பார்ப்பனர்கள், அர்ச்சகர் பதவியில் ‘தகுதி-திறமை’ கூடாது - ‘சாதி’ வேண்டும் என்று கூறுவது ஏன், என்று பொதுச்செயலாளர் கோவை. இராமகிருட்டிணன் கேட்டார். சாதி, ஆகமம், சோதிடம், வழி பாட்டு மொழி தொடர்பாக பார்ப் பனர்கள் வைக்கும் வாதங்களைத் தகர்த்து எறிந்தது அவரது உரை. மேட்டூரில் ஜூன் 25 ஆம் தேதி நடந்த நாத்திகர் விழாவில் பெரியார் தி.க.பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் ஆற்றிய உரை. ‘சோதிடப் புரட்டு’ என்ற அருமையான நூல் இந்த நாத்திகர் விழாவில் வெளியிடப்பட இருக்கிறது. சோதி டத்தை எதிர்த்து இந்நூலில் கூறியவற்றுக்கு எந்த சோதிடராலும் நிச்சயம் பதில் கூற முடியாத நிலைதான் இருக்கும். சென்ற சில வருடங்களுக்கு முன் நடந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்ற தங்களின் கணிப்பை இந்தியாவின் புகழ்பெற்ற சோதிடர்கள் எல்லாம் பத்திரிகைகளில் எழுதினர். இந்தியாவின் தலைமை அமைச்சராக வாஜ்பேயிதான் வருவார் எனச் சிலரும், சோனியாகாந்திதான் என சிலரும் கணித்தனர். வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், எந்த பிரபல சோதிடராலும் கணிக்க முடியாத மன்மோகன் சிங் தலைமை அமைச்சராக ஆனார். இது போன்ற நூல்களை வெளியிடுவது மாதிரியான சரியான பணிகளைச் செய்ய பெரியாரின் வழியிலே இயங்குகின்ற எங்களின் பெரியார் திராவிடர் கழகம் முனைந்து ஈடுபட்டு வருகிறது. எங்கள் இயக்கத்திற்கு பெரியார் விட்டுச் சென்ற பொருள் எதுவும் கிடையாது. பொது மக்களாகிய உங்களிடம் கையேந்தி, பொருள் திரட்டி, உங்களுக்காகவே இவற்றை வெளியிடுகிறோம். அனைத்து சாதிகளைச் சார்ந்தவர்களையும் அர்ச்சகர்களாக்க வேண்டும் என்பதற்காக, எங்கள் இயக்கத்தைச் சார்ந்த சுமார் ஆயிரம் பேர் 2004 ஆம் ஆண்டில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலின் கருவறைக்குள் நுழையும் போராட்டத்தை நடத்தினோம். அதனால் சிறைபட்டோம். நம்முடைய அந்தக் கோரிக்கை இப்போது சட்டமாகியிருக்கிறது என்று சொன்னால், கழகத்தின் முன்னணியினரும் தோழர் களும் சுமார் 30 ஆண்டுகாலம் இதற்காக பல்வேறு போராட்டங்களை இடைவிடாது சந்தித்தோம். அந்த வகையில் இது வெற்றி பெற்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனாலும், பார்ப்பனர்கள் எங்களைக் கேட்கிறார்கள், ‘நீங்கள்தான் கடவுள் இல்லை என்று கூறுபவர் களாயிற்றே, யார் அர்ச்சகர் ஆனால் உங்களுக்கு என்ன? என்கிறார்கள். நாங்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத வர்கள்தான்.அதுவும்கூட சிவன், சரசுவதி, விஷ்ணு, பிரம்மா போன்ற இந்துக் கடவுள்களை மட்டும் இல்லை என்று சொல்பவர்கள் அல்ல. எந்தக் கடவுளும் இல்லை என்றுதான் நாங்கள் கூறுகிறோம். ஞாயிற்றுக் கிழமைகளில் மருத்துவ மனைகளுக்கும், சிறைச்சாலைகளுக்கும் சென்று அங்குள்ளோருக்காக பாதிரியார்கள் ஜெபிக்கிறார்கள். மக்கள் அவதிப்படும், வேதனைப்படும் இடங்களுக்குச் சென்று அங்கு போய் பாதிரி யார்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். மக்களின் துன்பத்தைப் பயன்படுத்தி மதத்தை வளர்க்கத் துடிக்கிறார்கள். அவ்வாறு ஒரு மருத்துவமனைக்குச் சென்ற பாதிரியார், மரணப் படுக்கையிலிருந்து நோயாளி ஒருவரிடம் சென்று அவருக்காக ஜெபித்தார். அப்போது அந்த நோயாளி உரத்த குரலில் கத்தினார். அதைப் பற்றிய கவலையின்றி, அந்தப் பாதிரியார் ஜெபித்துக் கொண்டே இருந்தார். அந்த நோயாளி சிறிது நேரத்தில் மரணமடைந்தார். அந்த பாதிரியார் வேற்று நாட்டுக்காரர் என்பதால், நோயாளி கடைசியாக என்ன சொல்லி புலம்பினார்என்பதை பாதிரியார்

தெரிந்து கொள்ள விரும்பினார். ‘நீங்கள் என்னுடைய சுவாசத்திற்குப் பயன்படும் ஆக்சிஜன் குழாயை மிதித்துக் கொண்டு இருக்கிறீர்கள்; உங்கள் காலை எடுத்தாலே நான் பிழைத்துக் கொள்வேன்’ என்று மரணமடைந்த நோயாளி புலம்பியிருக்கிறார். (பலத்த சிரிப்பு) கிருபானந்த வாரியார் அந்தக் காலங்களில் எங்களின் பகுத்தறிவு வாதங்களுக்கு எதிர் வழக்காடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி ஒரு முறை வாரியார் கூறும்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை எதிர்த்து ஒரு எடுத்துக்காட்டோடு பதில் உரைத்தார். ‘உணவு விடுதிக் குச் சென்றால், எல்லோரும் சமையலறைக்குச் செல்ல முடியுமா? சாப்பிடுகிறவர்கள் சாப்பிடும் இடத்தில்தான் இருக்க வேண்டும்; சமைக்கிறவர்கள் தான் சமையற் கூடத்தில் இருக்க முடியும்’ என்றார் வாரியார். திராவிடர் கழகத்தின் பிரச்சார அணிச் செயலராக அப்போது இருந்த செல்வேந்திரன் அதற்கு இப்படி பதில் கூறினார். ‘காசு கொடுக்காமல் ஓட்டலில் சாப்பிட்டால், சாப்பிடுகிறவர்களும் மாவு ஆட்ட சமையலறைக்குச் செல்ல முடியும்’ என்றார். (பலத்த கைதட்டல்) பார்ப்பனர்கள் சொன்னார்கள்: ‘நாயில்கூட பொமரேனியன், புல்டாக், அல்சேஷன், ராஜபாளையம், நாட்டு நாய் என்ற பல சாதி நாய்கள் இருக்கின்றன. நாய்களிலேயே இவ்வளவு சாதிகள் இருக்கும்போது, மனிதரில் சாதிகள் இருக்காதா?’ என்றனர். நாய்களுக்கு அதனுடைய சாதி தெரியாதய்யா. எந்த நாய்க்காவது தான் நாட்டு நாய் என்றோ, ராஜபாளையம் என்றோ தெரியுமோ? இன்னும் சொல்லப் போனால், உயர்வகை என்று சொல்லப்படுகிற நாய்களை பெரிய பெரிய பங்களாக்களில் வெளியே விடாமல் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

புரட்டாசி மாதம் அந்த நாய்களை எல்லாம் வெளியே விட்டுப் பாருங்கள். எந்த நாயாவது அந்த சாதி நாயோடுதான் சேர்வேன் என்று சொல்லுமா? எந்த நாய் கிடைத்தாலும் அது தன்னுடைய வேலையைச் செய்யும். (பலத்த கைதட்டல்) ஏனென்றால், நாய்களுக்கு சாதி தெரியாது. பார்ப்பனர்கள் மக்களையெல்லாம் எப்படி திசை திருப்புகிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான். ‘கோயிலின் ஆகம விதிப்படிதான் எதுவும் நடக்க வேண்டும்’ என ‘துக்ளக்’ சோ சொல்கிறார். சிவன் கோயில், விஷ்ணு கோயில் என்று தனித்தனியே ஆகமங்கள் உள்ளன. அதன்படிதான் நடக்கவேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்கிறார்கள். அதனால், அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் சென்று பூசை செய்ய முடியாது என்கிறார்கள் பார்ப்பனர்கள். அனைத்துச் சாதியினர் என்றால் யார்? பெரியாரின் தொண்டர்களாகிய நாங்கள் கோயிலுக்குள் சென்று மணியடிப்பதற்கா கேட்கிறோம்? நாங்கள் எந்தக் காலத்திலும் கோயிலுக்குள் போகப் போவதில்லை. கோயிலைக் கட்டவும், கட்ட உதவியர்களுமான வன்னியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், நாடார்கள், கவுண்டர்கள், செட்டியார்கள் இவர்களைப் போன்று கடவுளை நம்பும் மக்கள், அவர்கள் வணங்குகிற கடவுளைத் தொட்டு ஏன் வணங்கக் கூடாது? என்றுதான் நாங்கள் கேட்கிறோம். சரசுவதிக்கு சட்டைத் தைத்த தையல்காரர் யார்? நாங்கள் சொல்வது இதுதான். கடவுள் என்ற ஒன்று உருவாக்கப்பட்டது காட்டுமிராண்டி காலத்தில்தான் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த காட்டுமிராண்டி காலத்தில் இந்த ஆகமங்கள் எல்லாம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டா? அது போலவே காட்டுமிராண்டி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட கடவுள் இப்போது இருப்பது போலவா இருந்திருக்கும்? சரசுவதி என்ற கடவுளுக்கு நான்கு கைகள் இருக்கின்றன. அந்த நான்கு கைகளுக்கும் சரியான அளவில் ஜாக்கெட் தைத்துப் போட்டிருக்கிறார்கள். எந்த ஆகமத்தில் நான்கு கைகளுக்கும் பட்டுத் துணியால் ஜாக்கெட் தைத்துப் போடலாம் என்று எழுதப்பட்டிருக்கிறது. கடவுள் உருவாக்கப்பட்ட அந்த காட்டுமிராண்டி காலத்தில் பட்டு இருந்ததா? பருத்தி இருந்ததா? இல்லை, ஜாக்கெட் தைப்பதற்குத்தான் தையற்காரர் இருந்தாரா? (பலத்த கைதட்டல்) ஓவியர்கள் வந்ததற்குப் பிறகு தான் கடவுளுக்கே உருவம் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் முருகன் படம் எல்லாம் நடிகர் சிவக்குமார் மாதிரியே இருக்கும். சரசுவதி, லட்சுமி போன்ற கடவுள்களின் உருவம் நடிகை ஸ்ரீதேவி மாதிரியே இருக்கும். ஓவியர்கள் தாங்கள் பார்த்த பிரபலமானவர்களின் முகத்தை அப்படியே கடவுள்களின் முகங்களாக வரைந்து கொடுத்தார்கள், அவ்வளவுதான். கடவுள் கிருஷ்ணரே நடிகர் என்.டி.ராமாராவ் தான். கிருஷ்ணனின் முகம் நினைவுக்கு வரவேண்டுமென்றால் என்.டி.ராமாராவ் முகம் தானே நினைவுக்கு வரும்?ஆகமத்தில் இப்படியெல்லாம் உருவம் இருந்ததா? ஆகமத்தை மீறி இருக்கின்ற இதை மட்டும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். சிவப்புச் சட்டை, சிவப்புச் சேலை என்று பக்தர்களின் உடையால் மேல் மருவத்தூர் முழுவதும் ஒரே சிவப்பாகவே காட்சியளிக்கிறது. சீனாவில் கூட அவ்வளவு சிவப்பு இருக்காது போல் தெரிகிறது. அந்த பங்காரு அடிகளாரின் ஆதி பராசக்தி கோயிலில் ஆகமத்தின் நிலை என்ன? பெண்களே அந்தக் கோயிலில் பூசை செய்கிறார்களே! பார்ப்பனர்கள் சொல்லும் ஆகமம் அங்கு என்னாச்சு? ஆகமம் அழிந்து போய்விட்டதா? அப்ப, ஆதிபராசக்தி கோயிலில் இருப்பது கடவுள் இல்லையா? ஆதிபராசக்தி கோயிலில் இருப்பது கடவுள் இல்லை என்று எந்தப் பார்ப்பானாவது மக்களிடம் போய் பிரச்சாரம் செய்வானா? ஆக, ஆகமம் அங்கே நிற்கவில்லையே? சரி, ஆகமம், ஆகமம் என்கிறார்களே பார்ப்பனர்கள், உண்மையிலேயே ஆகமப்படிதான் எல்லாம் நடக்கிறதா? முன்பெல்லாம் கோயில் களில் இசைக்கருவிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு இசைக் கலைஞர்கள் தனித்தனியே உட்கார்ந்து கோயிலின் சிறப்புப் பூசையின் போது வாசித்து வந்தார்கள். இப்போது, சிறப்புப் பூசையின்போது எல்லாக் கோயில்களிலும் மின்சாரத்தின் மூலம் மோட்டார் வைத்து இயக்கி அவ்வளவு இசைக் கருவிகளையும் ஒலிபரப்புகிறார்களே? மோட்டர் மூலம் இசையைக் கோயில்களில் ஒலிபரப்பலாம் என்று எந்த ஆகமத்தில் எழுதி இருக்கிறது? கோயில்களில் திடீரென்று எதையும் மாற்றினால் மக்கள் கேள்வி கேட்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு கோயில் நிர்வாகிகள் கடவுளின் மேல் அந்தப் பழியைப் போடுகிறார்கள். அதே போல்தான், அண்மை யில் சபரிமலையில் இருக்கும் அய்யப்பனிடம் கேட்டார்களாம். அய்யப்பனும் சபரிமலைக்கு ‘ரோப்கார்’ விடலாம் என்று சொல்லி உத்தரவு கொடுத்து விட்டாராம்! அய்யப்பன் கோயிலில் ‘ரோப் கார்’ வசதி மிக விரைவில் வர இருக்கிறது. என்ன காரணம்? அய்யப்பன் கோயிலுக்குச் செல்லும் மக்கள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது. ‘ரோப் கார்’ விட்டாவது மக்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்பதுதான் காரணம். கோயிலுக்கு ஆட்களை ‘ரோப்கார்’ மூலம் கொண்டு செல்லலாம் என்று எந்த ஆகமத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. திருப்பதி கோயிலில் குளிரூட்டும் (ஏர்கண்டிஷன்) வசதியை செய்திருக்கிறார்கள். அங்கே குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டரிலேயே வந்து இறங்கலாம் என்கிறார்கள். எந்த ஆகமத்திலாவது இதைப் பற்றியெல்லாம்; குறிப்பிடப்பட்டிருக்கிறதா? சென்ற மாதம் மேட்டூரில் இருந்து ஓடஓட விரட்டி அடிக்கப்பட்ட சமண (ஜைன) மதத்தைச் சார்ந்த அம்மணச் சாமியார்களைப் போலத் தானே காட்டு மிராண்டி காலத்தில் இருந்த சாமிகளும் இருந்திருக்கும்! ஜைன சாமியார்கள் உடலில் ஆடையின்றி அம்மணமாக சாலையில் நடந்தார்கள். நாகரிக உலகில் இவ்வாறு அம்மணமாக உலா வரலமா என்று நமது கழகத் தோழர்கள் மறியல் செய்தார்கள். அதன் விளைவாக, அந்தச் சாமியார்களைச் சுற்றி திரையைக் கட்டி, திரையில்லாத அந்தக் கால திரைப்படத்தில் திரையைப் பிடித்துக் கொண்டே ஓடுவதுபோல மேட்டூரில் திரையைப் பிடித்த காவல்துறை ‘கொள்ளேகால்’ வரைக்கும் சாமியார்களுக்குத் திரைப்பிடித்துக் கொண்டே ஓடியது. (பலத்த கைதட்டல்). கடவுளும் அது உருவாக்கப்பட்ட பைபிளும் சொல்கிறது: ‘தன்னுடைய உருவத்திலேயே மனிதர்களை தோற்றுவித்தார்’ என்று. அதுபோலவே, காட்டுமிராண்டி காலத்தில் இந்தியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா போன்ற உலகிலுள்ள எல்லா மனிதர்களும் விவசாயம்தான் செய்தார்கள்; கால்நடைகளைத்தான் மேய்த்தார்கள். அதனால்தான் மனிதனால் அக்காலத்தில் உருவாக்கப் பட்ட அனைத்துக் கடவுள்களும் ஆடு, மாடு மேய்க்கும் கடவுள்களாகவே இருந்திருக்கின்றன. கிருஷ்ணனும் மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தார். இயேசுவும் மாட்டுத் தொழுவத்தில்தான் பிறந்தார். காரணம், அப்போது இருந்த மனிதர்களின் நிலை அப்படி.இப்போது கடவுள்கள் உருவாக்கப்பட்டால் ‘செல்போனோடு’தான் இருப்பார்கள். அப்போது கடவுள் கைகளில் சூலாயுதம், வேல், கம்பு போன்றவை இருப்பது போன்று தோற்றுவிக்கப்பட்டது. இப்போது பிள்ளையார்கூட ஏ.கே.47 வுடன்தான் வலம் வருகிறார். கார்கில் பிள்ளையார் என்றுகூட தமிழ்நாட்டில் வந்து விட்டது. கார்கில் பிள்ளையாரை சண்டை போட கார்கிலுக்கு அனுப்பியிருந்தால், நமது வரிப்பணமாவது மிச்சாமாகி இருக்கும். அந்த கார்கில் போரினால் நிறைய பிணங்கள் தமிழ்நாட்டுக்குத்தான் வந்தன. ராமநாதபுரம், புதுக்கோட்டை போன்ற இடங்களிலிருந்து வயிற்றுப் பிழைப்பிற்காக சிப்பாய்களாகப் போனவர்கள் கார்கிலிருந்து பிணங்களாக பெட்டிகளில் திரும்பி வந்தார்கள். கடவுளுக்கு பூசை செய்யும்போதுகூட சமற்கிருதத்தில்தான் மந்திரம் சொல்ல வேண்டும் என்று பார்ப்பனர்கள் சொல்கிறார்கள். ஒரே ஒரு கடவுள்தான் உலகம் பூராவையும் படைத்ததாகச் சொல்லப்படுகிறது. கிருஷ்ணர்தான் ‘ஜகத் குரு’ என்றால், அமெரிக்கா, ஆப்பிரிக்கா, அய்ரோப்பா, அரபு நாடுகள் போன்ற எல்லா நாடுகளுக்கும் கடவுள் கிருஷ்ணரின் மொழி என்று சொல்லப்படுகிற சமஸ்கிருதம் தானே அந்த நாடுகளுக்கும் மொழியாக இருந்திருக்க வேண்டும். அவ்வளவு ஏன், நம் எல்லோரையும் படைத்ததாகச் சொல்லப்படுகிற கடவுள் நம் எல்லோரையும் தமிழ் பேச வைத்துவிட்டு கடவுள் மட்டும் தனக்கு சமற்கிருதத்தில்தான் பூசை செய்ய வேண்டும் என்று கூறுகிறது என்றால் நாம் அதை ஏற்க முடியுமா? நம் வீடுகளில் வளர்க்கும் நாய்க்குட்டியைக் கூட இங்கே வா, உட்கார், இதைப் பிடி, அதைப் போய் வாங்கி வா என்று தமிழ் மொழியில் சொல்லி நாயை ஏவினால் நாய் அதன்படி நடக்கிறது. நாய்க்குட்டிக்குத் தமிழ் தெரியாது. ஆனால், நம் அனைவரையும் படைத்ததாகச் சொல்லப்படுகிற கடவுளுக்கும் தமிழ் தெரியாது என்கிறார்கள். (கை தட்டல்) எனவே, இது பார்ப்பனர்களின் ஏற்பாடு. எங்களுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லை. ஆனாலும், இங்கு நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் எதற்காக எங்கள் தோழர்கள் தங்களை வருத்திக் கொண்டு முதுகிலும், வாயிலும் அலகு குத்தி வந்தார்கள்? எவ்வளவு சங்கடம் தெரியுமா அது? பக்தராயிருந்து கடவுள் பெயரில் தங்களை வருத்திக் கொள்பவர்களுக்கும் இதே அளவு சங்கடம் உள்ளது. இதை எல்லோரும் செய்ய முடியும்; இதனால் யாரும் செத்துப் போய்விடப் போவதில்லை. கொஞ்சம் நேரம் வலிக்கும்; அதைப் பொறுத்துக் கொண்டால் போதும். பக்தர்கள் பத்தியைப் பரப்ப அதுபோல் செய்கிறார்கள். இதில் பக்தி என்பது அவசியமில்லை என்பதை செயல்முறை விளக்கமாகச் செய்து, அதனால் எல்லோரும் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதற்காக நாங்களும் அலகு குத்திக் காட்டி இந்த சங்கடத்தை ஏற்றுக் கொள்கிறோம். பக்தியின் பேரால் இதைச் செய்வதால் அவர்களுக்கும், அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கும் பல ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஏகப்பட்ட மரியாதை கிடைக்கும். ஆனால், அறிவுப் பிரச்சாரம் செய்கிற நாங்கள் எங்கள் சொந்தப் பணத்தைப் போட்டும், மக்களிடம் எங்கள் தோழர்கள் கையேந்தி பெற்ற பணத்தைக் கொண்டும் இதைச் செய்கிறோம். மக்களை அறிவியல் ரீதியாக சிந்திக்கத் தூண்டும் முயற்சி யாகத்தான் இதைச் செய்கிறோமே அன்றி, தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த இலாபமும் இல்லை. பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அர்ச்சகராகக் கூடாது என்று கூறுவதன் மூலம் கோயில் கருவறைக்குள் தீண்டாமை நிலவு கிறது. அங்குதான் சாதி காப்பாற்றப்படுகிறது. பார்ப்பான் உயர்ந்தவன்; அவன் தான் கற்பனையான கடவுளின் முதல் குடிமகன் என்ற நிலை உள்ளது. உலகம், கடவுளுக்குக் கட்டுப்பட்டது; கடவுள், மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவர்; மந்திரம், பார்ப்பானுக்குக் கட்டுப் பட்டது என்று இந்துமதம் சொல்கிறது. இதை அடிப்படையாக வைத்து தான் பார்ப்பனரல்லாத வர்களாகிய நம் அனைவரையும் சூத்திரர்கள் என்று அரசியல் சட்டம் கூறுகிறது. அதை உச்சநீதிமன்றமும் உறுதிப்படுத்தி யுள்ளது. அதனால் தான், 1973 இல் கலைஞர் அவர்கள், அனைத்து சாதியினரும் அர்ச்சக ராகலாம் என்று சட்டம் கொண்டு வந்தபோது, அது செல்லாததாக ஆக்கப்பட்டது.மிகப் பெரிய பக்தனான ‘நந்தன்’ ஏன் கோயிலுக் குள் நுழைய முடியவில்லை? நந்தன் கோயிலின் வாசலில் நின்று சிவனை ‘தரிசிக்க’ வந்த போது, ‘நந்தா உள்ளே வா’ என்று சிவன் ஏன் சொல்லவில்லை? மாறாக, நந்தியே விலகி நில் நந்தன் என்னைப் பார்க்கட்டும் என்றுதான் சிவன் சொன்னான். நந்தன் வெளியிலேயே நிற்க வைக்கப்பட்டதற்குக் காரணம் ஆகம விதிகள் தான் என்று கூறினார்கள். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தத் தோழர்கள் கோயிலின் கோபுரத்தைத்தான் தரிசிக்கவேண்டும் என்றும், பிற்படுத்தப்பட்டவர்கள் அர்த்த மண்டபம் வரையிலும் தான் செல்ல முடியும் என்றும், பார்ப்பனர்கள் மட்டுமே கோயிலின் உள்ளே, கருவறையின் உள்ளே வரையும் செல்லலாம் என்றும் ஆகம விதிகள் கூறுகிறதாம். இதற்குப் பெயர் என்ன ஆகமமா? வெங்காய ஆகமம். இப்பொழுதெல்லாம், உணவு விடுதிகளில் ஒருவர் சாப்பிட்ட தட்டை இன்னொருவருக்கு வைக்கிறார் கள். அப்படி வைக்கப்படுகிற தட்டை இன்னொரு வருக்கு வைக்கிறார்கள். அப்படி வைக்கப்படுகிற தட்டை சில விடுதிகளில் சோப், சுடுநீர், நீராவி ஆகியவற்றின் உதவியுடன் கழுவி வைக்கிறார்கள். ஏன்? அதில் ஏதேனும் கிருமிகள் இருந்தால் அதைப் போக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக. ஆனால், கோயிலின் கர்ப்பகிரகத்திற்குள் மனிதர்கள் நுழையவே முடியாது. நம்மை அனுமதித்தால்கூட நாம் போக மாட்டோம்.அவ்வளவு நாற்றம். நாள் கணக்கில் எண்ணெய், நெய், பால் போன்றவற்றை சிலைமீது ஊற்றி, அதோடு கர்ப்பகிரத்திற்குள் இருக்கும் பார்ப்பானின் வேர்வையும் சிந்தி, மூக்கை சிந்தி - அவ்வளவு அசிங்கம் அங்கிருக்கிறது. இதற்குப் பெயர் ஆகமமாம். கோயில்களில் குடமுழுக்கு செய்கிறார்கள். இதைப் பற்றி பெரியார் வேடிக்கையாகச் சொல்வார்: ‘கோயிலின் உச்சிக்கு குடமுழுக்கு என்ற பெயரில் பார்ப்பனர்கள் விடிகாலை 4 மணிக்கே சென்று விடுகிறார்கள். பார்ப்பனச் சிறுவர்கள் (சின்ன சிண்டு) சிலரையும் கூட்டிச் செல்கிறார்கள். குடமுழுக்கைக் காண லட்சக்கணக்கில் மக்கள் வெளியில் கூடி நிற்கிறார்கள். சின்ன சிண்டு பார்ப்பான் ‘இயற்கைச் சிக்கலுக்காக’ அவசரம் என்று பெரிய பார்ப்பானிடம் கூறுகிறான். காலையில் 4 மணிக்கே குடமுழுக்கிற்காக மேலே ஏறிய பார்ப்பானுக்கு காலை 9 மணிக்கு சிறுநீர் அவசரமாக வருவது இயல்பு தான். குடமுழுக்கு செய்ய குடத்திலிருந்து நீரை எடுத்து கும்பத்தின் மேல் ஊற்றும்போது, இப்போது விடுடா என சின்ன பாப்பானிடம் கூறுகிறான். குடத்து நீரை ஊற்ற, ஊற்ற அவனும் சிறுநீரை கழித்து விடுகிறான். கீழே இருக்கும் நம்மாட்கள் எல்லாம் தீர்த்தம் என்ன உப்புக் கரிக்கிறது என்கிறார்கள். சிண்டு பாப்பான் சிறுநீர் கழித்தாலும் உப்பாகத்தானே இருக்கும்’. பூணூல் போட்டு ‘பிராமணன்’ ஆனாலும் சிறுநீர் சிறுநீர் தானே! அப்படி ஒரு காலத்தில் செய்த பார்ப்பனர்கள், இப்போது, தீர்த்தம் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்பதற்காக தீயணைக்கும் வண்டியை பயன்படுத்தி தீர்த்தத்தை அதன் குழாயில் வைத்து பீய்ச்சி அடிக்கிறார்கள். இது எந்த ஆகமத்தில் இருக்கிறது? உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடம் கொடுக்கப்படும் என்று மய்ய அரசு சொன்னவுடன், தகுதி-திறமை என்று பார்ப்பனர்கள் கூச்சல் போடுகிறார்கள். ஆனால், இந்த அர்ச்சகர் வேலைக்கு மட்டும் தகுதி, திறமை வேண்டாமா? பெரியாரின் நெஞ்சிலே தைத்து இருந்த முள்ளை தமிழினத்தின் சாதி ஒழிப்புப் போரில், மிகப் பெரிய பாய்ச்சலாக, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக லாம் என்று கலைஞர் அவர்கள் போட்டிருக்கிற ஆணையை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டி தனது நன்றியை தெரிவிக்கிறது. அதன்படி, இப்போது நான்கு இடங்களில் ஆகமக் கல்லூரிகளை திறக்க இருக்கிறார்கள். அங்கு படித்துத் தேர்வானவர்களை அர்ச்சகர்களாக நியமிப்பது தானே தகுதி-திறமைக்கு மதிப்பளிப்பதாகும்? இதற்கு மட்டும் பார்ப்பனர்கள் ஒப்புக் கொள்ளாமல், தங்களுக்கு மட்டும் அது உரியது என்கிறார்கள். பார்ப்பனர்களில்கூட 98 சதவீதம் மதிப்பெண் வாங்குபவர்கள் மருத்துவத்துக்கும், 95 சதவீதம் பெறுபவர்கள் பொறியியலுக்கும் செல்கிறார்கள். படிப்பே வராத முட்டாள் பார்ப்பனர்கள்தான் அர்ச்சகர் வேலைக்கு வருகிறார்கள். நாம் அந்த முட்டாள்களை தெய்வத்தைவிட உயர்ந்தவர்களாக மதிக்கிறோம். நமது தலை எழுத்தே அவர்கள் கையில் இருப்பது போல நம்மாட்கள் அவர்கள் முன் கை கட்டி, வாய்பொத்தி நிற்கிறார்கள். தமிழர்கள், இவைகளை எல்லாம் சிந்திக்க வேண்டும். நாங்கள் முன் வைக்கும் இந்தக் கருத்துகளில் உள்ள நியாயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் தன்மானத்துக்காகவே நாங்கள் இந்த சிந்தனைகளை முன் வைக்கிறோம் - இவ்வாறு பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் குறிப்பிட்டார்.
செய்தி: ஜஸ்டின் ராஜ்மதமாற்றத்தடைச்சட்டக் கண்டன ஆர்ப்பாட்டம்மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கோவையில் மதமாற்றத் தடைச்சட்டக் கண்டன மாநாடும் நடைபெற்றது. தூத்துக்குடியில் ஆட்சிக்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது

சம்பூகன் நீதிப் பயணம்’தூத்துக்குடியில் துவங்கி சென்னை வரை


தனியார்துறையில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி செப்.20 ‘சம்பூகன் நீதிப் பயணம்’- செப்பம்பர் 20-ல் தூத்துக்குடியில் துவங்கி-அக்டோபர் 2-ம் தேதி சென்னையில் நிறைவடைந்தது.

அக்.2 சென்னையில் நிறைவடைந்த சம்பூகன் சமூகநீதிப் பயணத்தை வாழ்த்தி, அனைத்து கட்சித் தலைவர் உரையாற்றினார்கள்.

வீரப்ப மொய்லி அறிக்கை
எரியட்டும் சட்ட விரோத மசோதா!அனைத்து கல்வி நிறுவனங்களிலும், தனியார் கல்வி நிறுவனங்களிலும் அது, அரசு உதவி பெறாத நிறுவனமாக இருந்தாலும்கூட, தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதை உறுதி செய்து, கடந்த ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இந்தப் புதிய சட்டம் 15(5). பார்ப்பனர்களின் மிரட்டலுக்கு பயந்துபோன மத்திய அரசு, இந்த சட்டத்தின் நோக்கத்தைக் குழி பறிக்க, மற்றொரு சட்டத்தை நிறைவேற்ற இருக்கிறது. சட்டம் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால், சட்டத்துக்கான மசோதா கடந்த ஆக. 25 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வீரப்ப மொய்லி அறிக்கை கூறுவதுபோல் - பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை, வரும் கல்வி ஆண்டிலிருந்தே, முழுமையாக அமுலாக்குவதை, சட்ட ரீதியாகவே தடுப்பதற்கு இந்தப் புதிய சட்டம் வரப் போகிறது. எனவே இப்போது - எரிக்கப்பட வேண்டியவைகள், வீரப்பமொய்லி குழு பரிந்துரை மட்டுமல்ல, நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதாவும்தான் (மசோதா எண் 76/2006). இதன் ஆபத்துகளை தெளிவாக சுட்டிக்காட்டி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் தோழர் வே. ஆனைமுத்து அவர்கள் ‘சிந்தனையாளன்’ ஏட்டில் எழுதியுள்ள தலையங்கத்தின் ஒரு பகுதியை இங்கு வெளியிடுகிறோம்:-இந்திய அரசு உயர்கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு தருவதற்கு - இந்திய அரசு அமைச்சரவையும், இந்திய அரசு உயர் நிர்வாகத் துறைகளும், இந்திய அரசை இன்று தலைமை தாங்கி நடத்தும் பார்ப்பனிய அடிமைகளும், புதியதாக ஒரு சட்டத்தை நிறைவேற்றிட வேண்டி, 25.8.2006 இல் மசோதா எண் 76/2006 என்பதை முன்மொழிந்து விட்டனர்.எதற்காக இந்த மசோதா? பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்திய அரசு உயர் தொழில்நுட்பக் கல்வியில் இடஒதுக்கீடு தருவதற்காக! அப்படித் தருவதற்கு ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விதி 15(4) இல் உள்ள அனுமதி மட்டுமே போதும். எப்படி?இந்திய அரசு வேலை, இந்திய அரசு பொதுத் துறை வேலை இவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கு முதன் முதலாக 27 சதவீத இட ஒதுக்கீடு தர, வி.பி.சிங் அரசு, விதி 16(4) இல் உள்ள அதிகாரத்தை மட்டுமே பயன்படுத்தித்தான் 13.8.1990 இல் நிருவாக ஆணை பிறப்பித்தது.டாக்டர் மன்மோகன் சிங் தலைமையில் உள்ள இன்றைய அரசுக்கு இதில் நாணயம், உண்மை, நேர்மை ஏதேனும் இருந்தால், ஏற்கெனவே உள்ள விதி 15(4) இன் கீழ் உள்ள அதிகாரத்தைக் கொண்டும் அரசமைப்புச் சட்டத்தில் அண்மையில் சேர்க்கப்பட்ட விதி 15(5) இல் உள்ள அதிகாரத்தைக் கொண்டும் - “விதி 245 இன்படி மய்ய அரசு அதிகாரப் பட்டியலில் பதிவு எண் 62 முதல் 66 வரை உள்ளவற்றில் கண்ட எல்லா அரசு உயர்தொழில் நுட்பக் கல்வி நிலையங்களிலும் 2006 கல்வி ஆண்டு முதலே பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு தரப்படும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து, 2006 சனவரியிலேயே துறைவாரியாக நிருவாக ஆணைகளைப் பிறப்பித்திருக்க வேண்டும் அல்லவா?தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலுள்ள கட்சிகளும், தலைவர்களும் இந்திய அரசுக்கு இதுபற்றி மனமார வேண்டுகோள் வைத்த பிறகும்கூட, அடாவடித்தனமாக - தீய நோக்கத்துடன், அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு சட்டத்தை இப்போது நிறைவேற்ற அரசு முயற்சிப்பது எதற்காக?எதற்காகவென்றால், பிற்படுத்தப்பட்டோருக்கு இந்திய அரசின் உயர் தொழில்நுட்பக் கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு தர, கொள்கை அளவில் இந்திய அரசு ஒப்புகிறது. ஆனால், அந்த 27 சதவீத என்கிற அளவை முழுவதுமாக - ஒரே தடவையில் 2007 கல்வி ஆண்டில் தர முடியாது என்று அடித்துக் கூறத்தான்.அத்துடன், அதற்கு மாறாக, 2007 இல் சில விழுக்காடும், 2008 இல் சில விழுக்காடும், 2009 இல் சில விழுக்காடும் பிற்படுத்தப்பட்டோருக்குத் தருவோம். அப்படித் தரலாமா என்பதை ஒவ்வொரு தடவையும் ஆய்வுக்கு அரசு உட்படுத்தும்; அதன் பிறகே ஒதுக்கீடு தரும் என்கிற தீய எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதே இந்தச் சட்டத்தின் முதலாவது நோக்கம் ஆகும்.இன்று இந்திய ஆட்சிப் பொறுப்பிலுள்ள இந்தத் திருடர்களுக்கு இப்படிச் சட்டம் இயற்றுவதற்கான அதிகாரத்தை அரசமைப்புச் சட்டத்தின் எந்த விதி தருகிறது? இந்திய அரசு அமைச்சகம் இந்திய அரசு உயர் அதிகார மய்யத்தில் உச்ச அதிகாரப் பதவிகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் படித்த அறிவாளிப் பார்ப்பனர்களால் ஆட்டிப் படைக்கப்படுகிறது என்பதால்தானே, இப்படி ஒரு சட்டம்?இதன் இரண்டாவது தீயநோக்கம் மிகவும் கொடூரமானது. இந்திய அரசு உயர்கல்வி மக்களின் வரிப்பணத்தில் தரப்படுவது. இதில் தற்போது 77.5 சதவீத அளவில் மேல் சாதியினர் பெற்றுவரும் இடங்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளிலும் குறையாமல் தொடர்ந்து பெற்றுக் கொள்ள வழி செய்வது இச் சட்டத்தின் இன்னொரு நோக்கம்.இந்தத் தீய நோக்கங்கள்:1) இந்தியாவிலுள்ள 60 கோடி பிற்படுத்தப்பட்டோரின் பிள்ளைகள் - அரசுச் செலவில் அளிக்கப்படும் தலை சிறந்த தொழில்நுட்பக் கல்விக்கான நிலையங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு முட்டுக்கட்டை போடுவது. இது வெகுமக்களுக்கு எதிரானது; வெகு மக்களின் உரிமையை உருக்குலைத்துப் பாழடிப்பது.2) காலங்காலமாக 100 விழுக்காடு இடங்களில் 77.5 விழுக்காடு இடங்களை அபகரித்து உயர்கல்வி பெற்று வருகிற வெறும் 10 கோடி மக்களின் பிள்ளைகள் - இனிமேலும், தொடர்ந்து அதே எண்ணிக்கையில் இடங்களைப் பெற்றிட சட்டப்படி ஒருவழி அமைப்பது. இது மக்கள் நாயகத்துக்கு எதிரானது. அரசமைப்புச் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டது.இப்போது, உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை உடனே தரக்கூடாது என்றும்; 76/2006 மசோதாவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக அரசு அமர்த்தியுள்ள நிலைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்ட பிறகு உச்சநீதிமன்றத்திடம் தரவேண்டும் என்றும்; அதன் பிறகு அரசு ஒரு சட்டம் செய்துதான் 27 சதவீத இட ஒதுக்கீடு தர வேண்டும் என்றும்; சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு இல்லாமல் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தக்கூடாது என்றும் 16.10.2006 இலும், 18.10.2006 இலும், உச்சநீதி மன்றம் தீர்ப்புக் கூறியுள்ளது.அத்துடன், இஸ்லாமியர்களுக்கு மத அடிப்படையில் இடஒதுக்கீடு தரக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இவை கண்டனத்துக்கு உரியவை. ஏன்?அரசமைப்பு விதி 15(4) இல் இருக்கிற அதிகாரம் போதாது என்பதால்தான், புதிதாக விதி 15(5) என்பது ஏற்கெனவே அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டது. இவற்றை உச்சநீதிமன்றம் புறக்கணிப்பது அடாதது. (இந்த இரண்டு விதிகளுமே உயர் கல்வியில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உறுதி செய்கின்றன - ஆர்)எனவே, வெகுமக்களின் கல்வி உரிமையை மறுக்கிற - மிகச் சிறுபான்மையாக உள்ள மேல்சாதியினரின் ஆதிக்கத்தை உயர்கல்வியில் காப்பாற்ற வழி வகுக்கிற இந்தத் தீய சட்டம் 2006 நவம்பர் 22 புதன் காலை 11தீயிட்டு மணிக்கு அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் “பிற்படுத்தப்பட் டோருக்கு எதிரான மசோதா எண் 76/2006 மற்றும் வீரப்ப மொய்லிகுழு பரிந்துரைகள்” என அச்சிடப்பட்டு எரிக்கப்பட்டது. சேலத்தில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலும், கோவையில் கழகப்பொதுச்செயலாளர் கோவை.இராமகிருட்டிணன் தலைமையிலும். தூத்துக்குடியில் ஆட்சிக்குழு உறுப்பினர் பால்.பிரபாகரன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது.

மனிதக்கழிவுகளை கைகளால் அள்ளுவதைத் தடைசெய்யக்கோரி ரயில் மறியல் போராட்டம்மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றி, தலையில் சுமந்து செல்லும் இழிவு - ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது சுமத்தி விட்டது இந்து மதம்! இந்த அவலம், இன்னும், அதுவும் அரசுத் துறையில் தொடர்ந்து கொண்டிருப்பது, வெட்கக் கேடு; அவமானம்; தலைகுனிவு. இதை அனுமதித்துக் கொண்டு ‘இந்தியா’ சுதந்திரம் பெற்று விட்டது என்று கூறிக் கொண்டிருப்பது, மிகப் பெரும் மோசடி! ரயில் நிலைய நடை மேடைகளில் - மனிதக் கழிவுகளை இப்போதும் மனிதர்களே அகற்றி வருகிறார்கள்.
கடந்த ஆகஸ்டு மாதமே, இந்த இழிவுகளுக்கு, ‘ரயில்வே துறை’யில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார். ஆனால், அதற்கான திட்டங்களைக் காணோம்! ரயில்வே துறையை நவீனப்படுத்த, ரூ.24,000 கோடிக்கு நிதி ஒதுக்கீடு செய்தும், அதில், இந்த இழிவை ஒழிப்பதற்கான திட்டங்களைக் காண வில்லை. இந்த நாட்டிலுள்ள சுமார் எட்டாயிரம் ரயில் நிலையங்களில், 500 ரயில் நிலையங்களில் மட்டுமே எந்திரத்தைப் பயன்படுத்தி, மனிதக் கழிவுகளை அகற்றத் திட்டமிட்டுள்ளார்களாம்! எஞ்சியுள்ள ரயில் நிலையங்களில் இந்த இழிவை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லை. இதை முழுமையாக ஒழிக்க எந்தக் காலக் கெடுவையும் நிர்ணயிக்க முடியாது என்று ரயில்வே அமைச்சகம், சமூகநீதி அமைச்சகத்திடம் தெரிவித்து விட்டதாம்! ரயில் நிலையங்களில், இந்த இழிவுக்கு முற்றுப் புள்ளி வைத்து, நவீன முறையில் கழிவுகளை அகற்ற அரசு செலவிட வேண்டிய தொகை ரூ.1,100 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இதற்கென ஒதுக்கப்பட்டது ரூ.200 கோடி மட்டுமே. (தகவல்கள் : ‘தலித் முரசு’)
இது மனிதர்களை - மனிதர்களாக அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையானால், இந்த இழிவை ஒழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்து அதற்கான திட்டங்களை உருவாக்க வேண்டாமா என்று கேட்கிறோம்! கருநாடக மாநிலத்தில் - சிறந்த பகுத்தறிவுவாதியும், பெரியார்-அம்பேத்கர் கொள்கைகளில் ஆழமான உறுதி கொண்டவருமான திரு.பசவலிங்கப்பா, அமைச்சராக இருந்த போது, இந்த இழிவு ஒழிப்புக்கு முன்னுரிமை கொடுத்து, தனது பதவிக் காலத்திலேயே, தனது மாநிலத்தில் ஒழித்துக்கட்ட சூளுரைத்து, அதன்படி செயல்படுத்தினார். தமிழ்நாட்டில், மனிதக் கழிவுகளை சுமப்பது ஒழிக்கப்பட்டாலும், சாக்கடைக் குழிகளில், மனிதர்களே இறங்கி தூய்மைப்படுத்துவதும், சில நேரங்களில், பணியில் ஈடுபடும்போதே நச்சுக்காற்றால், மரணிப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்காத ஒரு சமூகத்தில், நாம் மனிதர்களாக வாழ்வதே வெட்கக் கேடு அல்லவா?
ஆதித் தமிழர் பேரவை - இந்த இழிவுகளை எதிர்த்து - நவம். 28-ம் தேதி ரயில் மறியில் போராட்டத்தை அறிவித்திருப்பதை மிகவும் பாராட்டி வரவேற்கிறோம்! இன்று நடக்கும் அனைத்துப் போராட்டங்களிலும் - இதுவே முன்னுரிமை பெற வேண்டிய போராட்டம் என்பது நமது உறுதியான கருத்தாகும். ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ - இந்தப் போராட்டம் நடை பெறும் - அனைத்து ஊர்களிலும் முழுமையாகப் பங்கேற்கும் என்று, கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திருப்பூர் ‘தமிழர் எழுச்சி விழா’வில் கழக சார்பில் அறிவித்தார். உண்மையான மனிதநேய - மனித உரிமைப் போராட்டத்தில் பங்கேற்கும் நல்ல வாய்ப்பாகவே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஒவ்வொரு தோழர்களும் கருதி, களமிறங்கினார்கள். தூத்துக்குடியில் ஆட்சிக்குழு உறுப்பினர் பால். பிரபாகரன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

Tuesday, 3 July, 2007

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம்

முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புப் போராட்டம் தமிழக-கேரள எல்லையில் கம்பம், செங்கோட்டை, கோவை ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து கேரள மாநிலம் செல்லும் பொருட்கள் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்பட்டன. இப்போராட்டத்தில் ஆயிரக்கணக் கானவர்கள் கலந்துகொண்டு கைது செய்யப்பட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்த பிறகும் அதை ஏற்று செயல்பட பிடிவாதமாக மறுத்துவரும் கேரள அரசுக்கு எதிராக ஒருநாள் பொருளாதாரத் தடை மறியல் போராட்டம் நடத்தப்பெறும் என பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு அறிவித்தது. போராட்டத்தில் பெரியார் திராவிடர் கழகம் மற்றும் 15 அரசியல் கட்சிகள் 32 விவசாயிகள் சங்கங்கள் தமிழ்த் தேசிய அமைப்புகள் கலந்துகொண்டன.

கோவை கந்தே கவுண்டன் சாவடியில் பொருளாதார தடை மறியல் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமை தாங்கினார். தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் தணிக்கையாளர் பாலசுப்பிரமணியம், தமிழர் தேசிய இயக்க மாவட்டத் தலைவர் ஆர். காந்தி, தமிழர் உரிமைக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் கி.த. பச்சையப்பன், விடுதலை சிறுத்தைகள் மாநில துணைப் பொதுச்செயலாளர் சுசி. கலையரசன், தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் பொழிலன், தமிழர் கழகத் தலைவர் இரா. பாவாணன், தமிழக மனித உரிமை கழகத் தலைவர் அரங்க. குணசேகரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த மணிபாரதி, தமிழக இளைஞர் இயக்கத்தின் செயலாளர் தமிழரசன், கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் லோகநாதன், பெரியார் திராவிடர் கழக ஆட்சிக்குழு உறுப்பினர் வே. ஆறுச்சாமி, மா.ரெ. இராசகுமார், பெரியார் திராவிடர் கழக மாநில களப்பணி ஒருங்கிணைப்பாளர் ந. பிரகாசு, வே. கோபால், சா. கதிரவன், கா.சு. நாகராசன், நா. பன்னீர், கராத்தே இராசேந்திரன், மணிகண்டன், தனசேகரன், பாவேந்தன், சிவசாமித் தமிழன் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்கள். மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்து திருமண மண்டபம் ஒன்றில் காவலில் வைத்தனர். மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இப்போராட்டத்தின் விளைவாக கோவை-பாலக்காடு இடையே போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது.

Wednesday, 27 June, 2007

பல்லடம் நாத்திகர் விழா


கோவை மாவட்டம் பல்லடத்தில் 15.04.2007 அன்று நாத்திகர்விழா எழுச்யுடன் நடைபெற்றது. காலை 10.00 மணியளவில் பி.எம்.ஆர் திருமண மண்டபத்ல் தோழர் ப.மூர்த்தி நினைவு அரங்கில் பல்லடம் ஒன்றிய அமைப்பாளர் சி.விஜயன் வரவேற்புரை நிகழ்த்தபல்லடம் திருவள்ளுவர் தாய்த்தமிழ்ப்பள்ளி சிறார்களின் கலைநிகழ்ச்சியோடு விழா தொடங்கியது.
முதல் நிகழ்வாக தஞ்சை குப்பு வீரமணி அவர்கள் தலைமையில் கா.சு.நாகராசு, சிற்பி செல்வராசு, பன்னீர்செல்வம், பெங்களூர் கலைச்செல்வி, பேராசிரியர் ருக்மணி, மதிமாறன், சூலூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் பங்கேற்ற கருத்தரங்கம் நடைபெற்றது. தொடர்ந்து புலவர் செந்தலை கவுதமன் நடுவராகவும் கடலூர் வழக்கறிஞர் அழகரசன், மயிலாடுதுறை அழகிரி ஆகியோர் வழக்காடுபவர்களாகவும் பங்கேற்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது.
மாலை 5.00 மணியளவில் திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் மாபெரும் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி தொடங்கி காமராசர் திடலில் முடிவடைந்தது.
மாலை 7.00 மணியளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கழக தலைமைக்குழு உறுப்பினரான வழக்கறிஞர் செ.துரைசாமி அவர்கள் தலைமை வகித்தார். பல்லடம் திருமூர்த்தி வரnற்புரை ஆற்றினார். விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், ம.தி.மு.க. வெளியீட்டுச் செயலாளர் வந்தியத் தேவன், ஆதித்தமிழர்பேரவை பொதுச்செயலாளர் நீலவேந்தன், வழக்கறிஞர் செ. துரைசாமி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டினன், தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரை நிகழ்த்தினர். சூலூர் பன்னீர்செல்வம் நன்றியரையாற்றினார்.
விழாவிற்கு உழைத்த தோழர்கள்:
க.ஆறுமுகம், ந.ரமேசு, சிவக்குமார், இரா,அண்ணாத்துரை, ம.கருப்புச்சாமி, சி.முருகேசு, மு.வடிவேல்,சு.வடிவேல்,ந.சின்னச்சாமி, ம. இரவி, இராஜ்கபூர், திருமூர்த்தி, குளத்துப்பாளையம் குமார், குணசேகர், பொங்கலூர் கார்த்தி, சிவராசு, செகதீசன், இராமசாமி,கிருட்டினமூர்த்தி, இஸ்மத்,குட்டி. பழனிச்சாமி,ஆ.பொன்னுச்சாமி


தேசியப் பாதுகாப்புச் சட்டம் - கண்டனப் பேரணி


இந்து மக்கள் கட்சி அர்ஜுன்சம்பத் கும்பலால் சிறீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்வினையாகக் கிளர்ந்தெழுந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீது கலைஞர் தலைமையிலான தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச்சட்டத்தை ஏவியது. 40 தோழர்கள் 15 நாள் காவலில் இருந்து பிணையில் வந்தனர். பெரம்பலூர் இலட்சுமணன், தாமோதரன், கோபி இராம.இளங்கோவன்,அர்ச்சுனன்,முருகானந்தம், ஈரோடு குமரகுரு சென்னை குமரன் ஆகிய தோழர்கள் மீது தேசியப்பாதுகாப்புச் சட்டம் ஏவப்பட்டு ஐந்து மாதங்களாகச் சிறையில் உள்ளனர். பெரியாரியல் கடமையாற்றிய தோழர்கள் மீது தேசியப்பாதுகாப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசைக்கண்டித்து 16.03.2007 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடைபெற்றன.